கேப்டன் வருண்சிங், மு.க.ஸ்டாலின் | கோப்புப்படங்கள். 
தமிழகம்

என்றும் அவர் நம் நினைவுகளில் வாழ்வார்: கேப்டன் வருண்சிங் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: ''என்றும் அவர் நம் நினைவுகளில் நிலைத்து வாழ்வார்'' என்று குரூப் கேப்டன் வருண் சிங் மறைவிற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டேரி எனும் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். அவருக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து பெங்களூருவில் உள்ள விமானப் படை கமாண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட வருண் சிங்குக்கு தீக்காயங்கள், தொற்று போன்றவற்றில் இருந்து விரைவாக குணம்பெற வேண்டி ஹைபா்பேரிக் ஆக்சிஜன் தெரபியும் வருண் சிங்குக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கேப்டன் வருண் சிங் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்ததாக விமானப் படை தெரிவித்துள்ளது.

குரூப் கேப்டன் வருண் சிங் மரணத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி:

''குன்னூர் அருகே நடந்த துயர்மிகு ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்துவிட்டார் என்ற துன்பச் செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றேன். அவரது தீரமும் கடமையுணர்வும் அனைவருக்கும் ஊக்கமாக அமைவதுடன், என்றும் அவர் நம் நினைவுகளில் நிலைத்து வாழ்வார்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT