குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்ததற்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆம் தேதி நீலகிரி மாவட்ட குன்னூரில் காட்டேரி எனும் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டன.
இதனையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள விமானப் படை கமாண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட வருண் சிங் கவலைக்கிடமான நிலையிலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும் என்ற நம்பிக்கையோடு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
தீக்காயங்கள், தொற்று போன்றவற்றில் இருந்து விரைவாக குணம்பெறவேண்டி ஹைபா்பேரிக் ஆக்சிஜன் தெரபியும் வருண் சிங்குக்கு அளிக்கப்பட்டது. இந்தநிலையில் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானதாக விமானப் படை புதன்கிழமை அறிவித்துள்ளது.
குரூப் கேப்டன் வருண் சிங் மரணத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
குன்னூர், ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருண் சிங் அவர்களை மருத்துவமனையில் நேரில் சென்று பார்வையிட்டு அவரது பெற்றோர்களிடம் ஆறுதல் தெரிவித்தேன். அவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.