முன்னாள் அமைச்சர் தங்கமணி | கோப்புப் படம் 
தமிழகம்

கரூர் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீட்டில் சோதனை

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் அருகேயுள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் தங்கமணி, வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 6:45 மணிமுதல் 18 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சோதனை நடைபெற்று வரும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள கூலகவுண்டனூரில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீடு.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு, அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தங்கமணிக்குச் சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், வேலூர், சென்னை, ஆந்திரா, கர்நாடகா என மொத்தம் 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள கூலகவுண்டனூரில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வசந்தி வீட்டில் கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையிலான குழுவினர் இன்று (டிச.15-ம் தேதி) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT