தமிழகம்

கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் நாளை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி ருப்பதாவது:

வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக டிச.15-ம் தேதி (இன்று) கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

16-ம் தேதி (நாளை) முதல் 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வானமாதேவியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆற்காடு, மரக்காணத்தில் 5 செ.மீ., கடலூர் ஆட்சியர் அலுவலகம், வானூர்,காவேரிப்பாக்கம், ஊத்துக்கோட்டையில் 4 செ.மீ., வாலாஜா, வட்டனம், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, புதுச்சேரியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரிக்கடல் பகுதிகளில் 15-ம்தேதி (இன்று) முதல் 18-ம் தேதிவரை மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT