பெரம்பலூர் அருகே மயங்கி கிடந்த குரங்குக்கு வாயுடன் வாய் வைத்து செயற்கை சுவாசம் கொடுத்து உயிர் பிழைக்க வைத்து மருத்துவமனையில் சேர்த்த இளைஞரை பலர் பாராட்டினர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் ஒதியத்தில் உள்ள சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் எம்.பிரபு(38). கார் ஓட்டுநர். கடந்த டிச.9-ம் தேதி இவரது வீட்டுக்கு அருகில் சுற்றிய குரங்கு ஒன்றை, தெருநாய்கள் விரட்டி விரட்டி கடித்ததால், அந்த குரங்கு அங்குள்ள மரத்தில் ஏறி மயங்கிக் கிடந்தது. இதைப்பார்த்து பரிதாபப்பட்ட பிரபு, மரத்தில் ஏறி மயங்கிய நிலையிலிருந்த குரங்கை மீட்டபோது, அசைவற்ற நிலையில் இருந்தது.
இதனால், அந்த குரங்குக்கு இதய துடிப்பை மீட்கும் வகையில் மசாஜ் செய்ததுடன், அதன் வாயுடன் வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்தார். இதனால், சிறிது நேரத்தில் குரங்குக்கு மயக்கம் தெளிந்தது.
பின்னர், அந்தக் குரங்கை பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். மயக்கமடைந்த குரங்குக்கு பிரபு வாயுடன் வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து உயிரை காப்பற்றிய சம்பவத்தை அவரது நண்பர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி திரையுலக நட்சத்திரங்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரது பாராட்டைப் பெற்றது.இதனிடையே அந்த குரங்கு மறுநாள் (டிச.10) உயிரிழந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அந்த குரங்கை பிரேதப் பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.
இதுகுறித்த தகவல் பிரபுவுக்கு நேற்றுதான் தெரியவந்தது. இதைக் கேள்விப்பட்ட அவர், ‘‘இவ்வளவு கடுமையாக முயற்சி செய்தும் குரங்கு உயிர் பிழைக்காமல் போனது வருத்தமாக இருக்கிறது’’ என்றார்.