தமிழகம்

பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 13-வது நாளாக வேலைநிறுத்தம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்கள் விலை உயர்வு

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாட்டுப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன், ராமேசுவரம் நாட்டுப்படகு மீனவர்கள் 13-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாம்பனைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் கடந்த 13-ம் தேதி தலைமன்னார் அருகே மீன் பிடித் துக்கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற் படையினர் இலங்கை கடல் பகுதி யில் மீன் பிடித்ததாகக் கூறி இருதய ராஜ், அமல்தாஸ், அந்தோனிச்சாமி ஆகியோருக்குச் சொந்தமான நாட்டுப்படகுகளைக் கைப்பற்றி அவற்றில் இருந்த 23 மீனவர்களை சிறைபிடித்து வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த மீனவர் களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை 13-வது நாளாக நேற் றும் தொடர்ந்தனர். முன்னதாக இதே கோரிக்கைகளை வலி யுறுத்தி பாம்பனில் கடலில் இறங் கிப் போராட்டம், மீனவர்கள் கஞ்சித் தொட்டி திறப்பு, மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை என தொடர் போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

மீன்கள் விலை உயர்வு

நாட்டுப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம் மீன் சந்தைகளில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் கிலோ ரூ.50-க்கு விற்ற மத்தி மீன் தற்போது 80 ரூபாயாகவும், ரூ.500-க்கு விற்ற வஞ்சிரம் 600 ரூபாயாகவும், ரூ.250-க்கு விற்ற கிழக்கான் மீன் 300 ரூபாயாகவும், ரூ.200-க்கு விற்ற ஊளி மீன் 250 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT