தமிழகம்

தி இந்து தமிழ் நாளிதழுக்கு சிறந்த பிராந்திய மொழி விளம்பரத்துக்கான தேசிய தங்க விருது

செய்திப்பிரிவு

கோவாவில் நடந்த 'கோவா ஃபெஸ்ட் 2014' மாநாட்டில் சிறந்த பிராந்திய மொழி விளம்பரத்துக்கான தேசிய தங்க விருது 'தி இந்து தமிழ்' நாளிதழுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய விளம்பர நிறுவனங்களின் சங்கம் மற்றும் மும்பை விளம்பர கிளப் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் சிறந்த விளம்பரங்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்து மே மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் ’கோவா ஃபெஸ்ட் 2014’ என்ற தலைப்பில் விளம்பர துறைக்கான தேசிய அளவிலான மாநாடு கோவாவில் நடந்தது.

இதில் மொத்தம் 53 விளம்பர நிறுவனங்கள் கலந்து கொண்டன. பல்வேறு விளம்பர நிறுவனங்களில் இருந்து 619 விண்ணப்பங்கள் இடம் பெற்றன. இதில் இறுதி பட்டியலில் 50 விண்ணப்பங்கள் இடம் பெற்று இருந்தது. விளம்பரங்களை தேர்வு செய்வதற்கு ஏ.பி.பி குழுமத்தின் திபங்கர் தாஸ் புர்ஸ்கயஸ்தா (purkayastha) தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த முறை நடைபெற்ற மாநாட்டில் தெற்கு ஆசியாவில் இருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 'தி இந்து தமிழ்' நாளிதழின் ' உலகம் உயிர் பெறும் உங்கள் மொழியில்' என்ற விளம்பரம் 'கோவா ஃபெஸ்ட்’ 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழி விளம்பரத்துக்கான தங்க விருதை வென்றது.

இந்த விருதை 'தி இந்து’ குழுமத்தின் விளம்பரப் பிரிவு துணைத் தலைவர் சுரேஷ் ஸ்ரீநிவாசன் பெற்று கொண்டார்.

SCROLL FOR NEXT