தமிழகம்

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குனர் சிவகாமி இன்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். "சுனாமி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்து பள்ளிகளும் நாளை விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கும் செய்திக் குறிப்பு போலியானது.

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், போலியான அறிவிப்பு குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தோனேசியாவின் மவுமேரா நகரின் வடக்குப் பகுதியிலிருந்து 100 கி.மீதொலை இருக்கும் திமோர் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ப்ளோரஸ் தீவில், கடற்பகுதியில் 18.5கி.மீ ஆழத்தில் இன்று இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு(உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.3 புள்ளி என ரிக்டர் அளவில் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு பாதிப்பிலை என்று அறிவிக்கப்பட்டாலும் கூட கடந்த 2004 டிசம்பரில் வந்தது போல் சுனாமி வரும் என சமூகவலைதளங்களில் போலியான தகவல்கள் பரவின.

இதுபோல், புதுச்சேரியிலும் போலியான தகவல்கள் பரவிய நிலையி, அங்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்ற தகவலும் பரவியது.

இந்நிலையில் தான், புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT