அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம். 
தமிழகம்

7 பேருக்கு ஒமைக்ரான் பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஜெ.ஞானசேகர்

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்குக் கட்டாயப் பரிசோதனை செய்யப்படுவதாகவும், அவ்வகையில் சந்தேகத்தின் பேரில் 7 பேருக்கு கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்தியாவில் இதுவரை 37 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என ஏற்கெனவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். தற்போது வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல் மையம், படுக்கைப் புண்கள் பராமரிப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, கரோனா தொற்றைக் கண்டறிய உதவும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கருவியை மருத்துவமனைக்கு வழங்கினர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

''நாட்டில் 38 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்கும் வகையில் பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வந்திறங்கும் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அந்த வகையில், நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கும், அவருடன் தொடர்புடைய 6 பேருக்கும் என மொத்தம் 7 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில், அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 7 பேரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அவர்களது சளி மாதிரிகள் பெங்களூருவுக்குப் பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT