சாட்டை துரைமுருகன் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் போலீஸார் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் குறித்த சாட்டை துரைமுருகனின் அவதூறு பேச்சை போலீஸார் எழுத்து வடிவில் தாக்கல் செய்யாததற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் யூடியூபர் சாட்டை துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக உள்ளார். இவர் திமுக தலைவர் மு.கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், இனிமேல் அவதூறு பரப்பமாட்டேன் என உறுதிமொழிக் கடிதம் வழங்கியதால் சாட்டை துரைமுருகனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாகப் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தஞ்சாவூர் வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது சாட்டை துரைமுருகனின் பேச்சை எழுத்து வடிவில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி பி.புகழேந்தி முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, போலீஸார் துரைமுருகன் பேச்சை எழுத்து வடிவில் தாக்கல் செய்யவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, மாநில முதல்வரை அவதூறாக விமர்சனம் செய்த பேச்சை எழுத்து வடிவில் தாக்கல் செய்யப் போதிய அவகாசம் வழங்கியும் போலீஸார் தாக்கல் செய்யவில்லை. வீடியோ பதிவை மட்டும் கொடுத்துவிட்டால் போதுமா? அடுத்த விசாரணையின்போது துரைமுருகனின் அவதூறு பேச்சை எழுத்து வடிவில் தாக்கல் செய்யாவிட்டால் போலீஸாரின் மனு தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.