தமிழகம்

நூற்றுக்கணக்கான ஏக்கரில் அழுகிய பூச்செடிகள், வாழைகள்: ஆய்வுக்கே வராத புதுச்சேரி அதிகாரிகள்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள், பூச்செடிகள் தண்ணீர் வடியாததால் அழுகிப் போய்விட்டன. வேளாண்துறை அதிகாரிகள் யாரும் ஆய்வுக்கே வரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். நஷ்ட ஈடாவது தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

புதுச்சேரியில் கிராமப் பகுதிகளான மண்ணாடிப்பட்டு, குமாரப்பாளையம், காட்டேரிக்குப்பம், வம்புபட்டு, சோம்பட்டு கிராமங்களில் 50 ஏக்கரில் பூச்செடிகள் கனகாம்பரம், மல்லி, முல்லை, இருவாச்சி, சாமந்தி பூக்கள் பயிரிடப்பட்டிருந்தன. கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நிலங்களில் மழை நீர் தேங்கியது. வடிகால் மூலம் நீர் வடியவில்லை. இதனால் வேர் அழுகிப் பூக்கள் அனைத்தும் கருகிவிட்டன. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டு நஷ்டமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், "மழை பெய்தும் பலனில்லாமல் போய்விட்டது. குழந்தையைப் போல் பயிர்களை வளர்த்துத் தண்ணீர் வடியாததால் வேர்கள் அழுகிவிட்டன. கஷ்டப்பட்டும் பலன் இல்லாமல் போய்விட்டது. விவசாயிகள் பாடுபட்டும் புண்ணியமில்லாமல் போய்விட்டது. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நேரில் வந்து பார்க்கவில்லை. கஷ்டத்தை அனுபவிக்கும் விவசாயிகளை மனிதர்களாக வேளாண்துறை நினைத்துப் பார்க்கவேண்டும். உண்மையில் வேளாண்துறை புதுச்சேரியில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. நஷ்ட ஈடாவது கிடைக்க வழிசெய்தால் தொடர்ந்து நாங்கள் பயிரிட முடியும்" என்கின்றனர்.

அதேபோல இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழையும் பயிரிடப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வாழை விவசாயிகள் கூறுகையில், "நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அழுகிவிட்டன. கொள்முதல் செய்ய இயலாது தண்டுகள் அழுகிப்போய்விட்டதால் சாகுபடி செய்ய முடியாது. முதல்வர் சரியான முறையில் உதவ வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இதேபோல் பலவிதத் தோட்டப் பயிர்களும் தண்ணீர் தேங்கியதால் அழுகியுள்ளதாகவும் விவசாயிகள் பரிதாபமாகக் குறிப்பிடுகின்றனர்.

SCROLL FOR NEXT