மதுரை: பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை 5 நாளில் ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் யூடியூபர் மாரிதாஸ். இவர் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தது தொடர்பாக, தமிழகத்தின் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக மதுரை நகர் சைபர் கிரைம் போலீஸார் டிச.9-ல் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு 2-வது நாளாக இன்றும் விசாரிக்கப்பட்டது.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், ''மனுதாரர் மாரிதாஸ், முப்படைகளின் தலைமைத் தளபதி மரணத்தில் தேவையற்ற கருத்தை முன்வைத்துள்ளார். மாநில அரசுக்கு எதிராகவும், தமிழகத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை உருவாக்கும் வகையிலும் பதிவிட்டுள்ளார். இவரைப் போல் சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்தைப் பதிவிட்ட நாம் தமிழர் கட்சியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.
மாரிதாஸ் வழக்கறிஞர் வாதிடுகையில், "மாரிதாஸ் அரசை விமர்சித்து வருபவர். அவரை அமைதியாக்குவதற்கே கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.
பின்னர் நீதிபதி, ''மாரிதாஸை சமூக வலைதளத்தில் 2 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அவர் நன்கு அறிந்தே ட்விட்டரில் கருத்தைப் பதிவிட்டுள்ளார். இதற்காக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 505 (1) மற்றும் (2), 124 (ஏ), 504, 153(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லாது. எனவே வழக்கு ரத்து செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
மதுரை சைபர் கிரைம் போலீஸார் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு 5 நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் போலி இ-மெயில் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் மாரிதாஸ் அடைக்கப்பட்டிருப்பதால், வழக்கு ரத்து செய்யப்பட்ட போதிலும் அவரால் விடுதலையாக முடியாத நிலை உள்ளது.