சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மோட்டார் அறையுடன் கிணற்றுக்குள் புதைந்த பெண் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று மீட்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே சித்த பட்டியைச் சேர்ந்தவர் ராசு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலை(42). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எஸ்.செவல்பட்டியில் உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் சோமன் என்பவரது விவசாய நிலத்தில் அஞ்சலை வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை விவசாய வேலைக்குச் சென்ற அவர் இரவில் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதையடுத்து ராசு மற்றும் கிராமத்தினர் சிலர் அஞ்சலை வேலை செய்த விவ சாய நிலத்தில் தேடினர்.
அப்போது அங்குள்ள கிணற் றுக்குள் மோட்டார் அறை இடிந்து விழுந்து கிடந்தது. அருகில் அஞ்சலை அணிந்திருந்த காலணி மற்றும் சாப்பாட்டுக்கூடை கிடந்தது.
இதனால் அவர் மோட்டார் அறையுடன் கிணற்றுக்குள் புதைந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு எஸ்.எஸ்.கோட்டை போலீஸார், திருப் பத்தூர், சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினர் பொக்லைன் மூலம் இடிபாடுகளை அகற்றினர். தொடர்ந்து மண் சரிந்ததால், இடிபாடுகள் அகற்றும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு, கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
இதையடுத்து நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு அஞ்சலை உடல் நேற்று மாலை மீட்கப்பட்டது.
மீட்புப் பணியை தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், டிஎஸ்பி ஆத்மநாதன், வட்டாட்சியர் கயல்விழி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யமூர்த்தி, உதவி மாவட்ட அலுவலர் தாமோதரன் ஆகியோர் கண்காணித்தனர்.