தேர்தல் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று முதலில் பாருங்கள் என நடிகர் சூர்யா அறிவுரை கூறியுள்ளார்.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், தேர்தல் ஆணையமும் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு மீம்ஸ் மற்றும் வாசகங்கள் மூலம் கவன ஈர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேலும், அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்களிடம் இருந்து வீடியோ தொகுப்பு ஒன்றையும் வாங்கி வெளியிட்டு வருகிறது. இந்த வீடியோ தொகுப்பில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், தினேஷ் கார்த்தி ஆகிய கிரிக்கெட் வீரர்கள் பேசியிருக்கிறார்கள்.
இந்த வீடியோ தொகுப்பில் தற்போது நடிகர் சூர்யாவும் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, "வாட்ஸ்-அப் குரூப் எல்லாம் இருக்கே, பள்ளி நண்பர்களுக்கு ஒரு குரூப், கல்லூரி நண்பர்களுக்கு ஒரு குரூப், குடும்பத்திற்கு ஒரு குரூப், புதுப்படம் வெளியானால் அதுக்கு ஒரு குரூப் என இருக்கிறது. அந்த குரூப்பில் நிறைய பேசிக் கொண்டே இருக்கிறோம்.
இதெல்லாம் பார்க்காமல் எங்கேயாவது இந்த போனை தூக்கி போட்டுவிட முடியுதா என்றால் முடியவில்லை. சும்மா நேரத்தைப் போக்குவதற்காக அனைத்தையும் பண்ணிவிடுகிறோம். ஆனால் நம்ம நாடு பாஸ் ஆவதற்கு ரொம்ப முக்கியமான விஷயம், அதை சரிபார்க்கிறோமா? வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்று பார்த்தீர்களா?
இந்த தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இருந்தால் பத்தாது. வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருக்கிறதா என்று முதலில் பாருங்கள். இப்போதே பாருங்கள். நம்ம 100% வாக்குகளை பதிவு பண்ணுகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.