தமிழகம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார்

ரெ.ஜாய்சன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பார்வையிட்டார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி விமானநிலையம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் ஆளுநரை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி எட்டயபுரம் சென்று பாரதியார் மணி மண்டபம் மற்றும் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தூத்துக்குடி வந்த ஆளுநர், தூத்துக்குடி அரசினர் விருந்தினர் மாளிகையில் வைத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். மேலும் முன்னாள் ராணுவத்தினரையும் சந்தித்து பேசினார்.

தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோரை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் மற்றும் துணைத் தலைவர் பீமல் குமார் ஜா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து துறைமுக அலுவலகத்தில் வைத்து அதிகாரிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

பின்னர் துறைமுகத்துக்குள் சென்ற ஆளுநர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இழுவை கப்பலில் பயணித்து துறைமுகத்தை பார்வையிட்டனர். மேலும், துறைமுகத்தில் உள்ள தளங்கள், வசதிகள், வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆளுநர் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மாலை 6 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரம் ஆளுநர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் துறைமுகத்தை பார்வையிட்டனர்.

பின்னர் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் கிளம்பிச் சென்ற ஆளுநர் இன்றிரவு அங்கு தங்குகிறார். தொடர்ந்து நாளை (டிச.14) காலை 6 மணி முதல் 7 மணி வரை திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம் செய்கிறார்.

பின்பு தூத்துக்குடி மாவட்ட பயணத்தை முடித்துக் கொண்டு திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு செல்கிறார். ஆளுநரின் வருகையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT