சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை முடிக்க கால அவகாசம் கேட்ட வழக்கில், இதுவரை நடைபெற்ற விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கீழமை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர்.
கடந்தாண்டு ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகன் இருவரையும் போலீஸார் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து இருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் முதலில் பென்னிக்ஸ், அடுத்து ஜெயராஜ் உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில் விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை தற்போது எந்த நிலையில் உள்ளது? விசாரணையை முழுமையாக முடிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்? என்பது குறித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 17-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.