ஜனவரி 5-ம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21 அன்று முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் சமூக இடைவெளியுடன் கூடிய கரோனா கட்டுப்பாடுகளுடன் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் தமிழகத்திற்குப் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி செப்டம்பர் 18-ல் பதவியேற்றார். புதிய ஆளுநர் பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
''தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 5-ம் தேதி அன்று தொடங்குகிறது. இக்கூட்டத் தொடர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்கெனவே நடைபெற்ற இடத்திலேயே தொடங்க உள்ளது.
ஜனவரி 5-ம் தேதி காலை 10 மணிக்கு மரபுப்படி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை தொடங்கும். அதைத் தொடர்ந்து பொது பட்ஜெட், அடுத்து மானியக் கோரிக்கைகள் இடம்பெறும்.
சட்டப்பேரவைக் கூட்டம் ஆரம்பிக்கும்போது காகிதமில்லா பட்ஜெட்டாகத்தான் ஆரம்பித்தோம். இம்முறை அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடுதிரை (touch screen) வசதி செய்யப்பட்டுள்ளது. அநேகமாக அனைத்துப் பணிகளும் இனி காகிதமில்லா வகையில் செயல்படுத்தப்படும்''.
இவ்வாறு சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்தார்.