தமிழகம்

பொட்டாஷ் விலை உயர்வு; தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

செய்திப்பிரிவு

பொட்டாஷ் விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் சம்பா, தாளடி பயிர்களுக்குத் தேவைப்படும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான பகுதிகளில் பணம் கொடுத்தும் பொட்டாஷ் உரம் கிடைக்காததால் உழவர்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். விவசாயிகளின் சிக்கலுக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிவடைந்து தாளடி நெற்பயிர் சாகுபடி தொடங்கியுள்ளது. அதற்கு முன்பாகவே சம்பா சாகுபடி தொடங்கி நடைபெற்று வருகிறது. காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் சுமார் 13 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்கள் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இதே அளவில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களின் விளைச்சல் அதிகரிக்க சாம்பல் சத்து உரமான பொட்டாஷ் மிகவும் அவசியமாகும். ஆனால், தமிழ்நாடு முழுவதும் பொட்டாஷ் உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சம்பா பருவத்திற்குக் குறைந்தது 25 லட்சம் மூட்டை பொட்டாஷ் தேவைப்படுகிறது. ஆனால், அதில் பாதியளவுக்குக் கூட பொட்டாஷ் உரம் கிடைக்காததுதான் தட்டுப்பாட்டுக்குக் காரணம் ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொட்டாஷ் ரூ.1040 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இப்போது ஒரு மூட்டை பொட்டாஷ் ரூ.1700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ரூ.1800 முதல் ரூ.1900 வரை விற்கப்படுகிறது.

பொட்டாஷ் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் இந்தியாவில் இல்லை என்பதால் பெரும்பாலும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதிதான் செய்யப்படுகிறது. இறக்குமதியின் அளவு குறைந்ததும், சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் பொட்டாஷ் தேவை அதிகரித்ததும்தான் தட்டுப்பாட்டுக்கும் விலை உயர்வுக்கும் காரணம் ஆகும். இந்தியாவில் பொட்டாஷ் விலை குறைவாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து உரங்களுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பொட்டாஷ் விலை மூட்டை ரூ.1040க்கு விற்பனை செய்யப்பட்டபோது ரூ.303 மானியமாக உர நிறுவனங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்தது. வெளிச்சந்தையில் பொட்டாஷ் விலை உயர்த்தப்பட்ட பிறகும் கூட, இந்தியாவில் பொட்டாஷ் உரத்திற்கான மானியம் உயர்த்தப்படாததும் பொட்டாஷ் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் டிஏபி உரத்திற்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. டிஏபி உரம் தயாரிப்புக்கான மூலப் பொருட்களின் விலை உயர்ந்ததும், அதை ஈடு செய்யும் அளவுக்கு மத்திய அரசின் உர மானியம் உயர்த்தப்படாததுதான் தட்டுப்பாட்டுக்கும், விலை உயர்வுக்கும் காரணம் என்று கூறப்பட்டது. பின்னர் டிஏபி உரத்திற்கான மானியத்தின் அளவை மூட்டைக்கு 500 ரூபாயிலிருந்து ரூ.1200 ஆக உயர்த்தியதால் டிஏபி உரத்தின் விலை குறைந்ததுடன், தட்டுப்பாடும் போக்கப்பட்டது.

அதேபோல், இப்போது பொட்டாஷ் உரத்திற்கான மானியத்தை 303 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயத்தினால் பொட்டாசின் விலை கணிசமாகக் குறையும். அதுமட்டுமின்றித் தட்டுப்பாடும் தீரும். தமிழகத்தில் பொட்டாஷ் உரத்திற்கு நிலவும் தட்டுப்பாடு, விலை உயர்வு குறித்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று மானியத்தை உயர்த்தி, விலையைக் குறைக்கும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

யூரியா தவிர்த்து மற்ற உரங்களின் விலைகள் கட்டுப்பாடு இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பதற்கு பத்தாண்டுகளுக்கு முன் மத்திய அரசு கொண்டுவந்த உர மானியக் கொள்கைதான் காரணமாகும். 2010ஆம் ஆண்டு வரை அனைத்து உரங்களுக்கும் நிலையான விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உரத் தயாரிப்புச் செலவுக்கும், விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை மானியமாக உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்தது. 2010ஆம் ஆண்டில் இந்த முறையில் அப்போதைய அரசு மாற்றத்தைக் கொண்டு வந்தது. யூரியா தவிர்த்த பிற உரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை மட்டுமே மானியமாக வழங்கும் முறையை மத்திய அரசு கொண்டுவந்ததால், மத்திய அரசுக்கு மானியச் செலவு குறைந்தது. ஆனால், வெளிச் சந்தையில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

யூரியா உர மானியம் மட்டும் பழைய முறையில் தொடருவதால் அதன் விலை மட்டும் உயருவதில்லை. ஒரு மூட்டை யூரியா ரூ.272.16 என்ற நிலையான விலையில் விற்கப்படுகிறது. இதற்காக ஒரு மூட்டைக்கு சராசரியாக ரூ.900 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல், அனைத்து உரங்களுக்கும் நிலையான விலையை நிர்ணயித்து, வேறுபாட்டுத் தொகையை உர நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கும் பழைய திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT