தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் தலைவர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்துப் பேசினர்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் டால்பின் தரன், பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கராத்தே தியாகராஜன், கு.க.செல்வம் ஆகியோர் நேற்று மாலை சந்தித்துப் பேசினர். 30 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. சமூக ஊடகங்களில் திமுக அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவிடும் பாஜக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பொய் வழக்குகளால் கைது செய்யப்படுவதாகவும், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ட்விட்டரில் வெளியிட்ட பதிவுக்காக மாரிதாஸ் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் வாயில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் அளித்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ‘தமிழக பாஜக தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்தேன். பாஜக சமூக வலைதள தொண்டர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், தேசியவாதிகளின் குரலை நசுக்கியும் வரும் திமுக அரசின் போக்கை கண்டித்து மனு அளித்தோம்’’ என்று கூறியுள்ளார்.
அண்ணாமலையுடன் ஆளுநரை சந்தித்த பாஜக மாநிலச் செயலாளர் டால்பின் தரனிடம் கேட்டபோது, ‘‘முகநூல், ட்விட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் திமுக அரசின் தவறுகளையும், திமுகவின் கொள்கைகளையும் விமர்சித்து பதிவிடுபவர்களை குறிவைத்து கைது செய்து வருகின்றனர். திமுகவுக்கு எதிரான கருத்துகள் எதுவும் சமூக ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதற்காக மற்றவர்களை அச்சுறுத்துவதற்காக இதை செய்து வருகின்றனர்.
திமுகவுக்கு எதிராக பதிவிடுபவர்களை கைது செய்யும் தமிழக காவல் துறையினர், இந்தியாவையும், இந்திய ராணுவத்தயும்,பிரதமர் நரேந்திர மோடியையும் அவதூறு செய்து பதிவிட்டு வருபவர்கள் மீது எத்தனை புகார்கள் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. நாட்டுக்கு எதிராக, ராணுவத்துக்கு எதிராக, பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக பதிவிட்டவர்கள் பற்றி ஆதாரங்களுடன் ஆளுநரிடம் மாநிலத் தலைவர் அண்ணாமலை மனு அளித்துள்ளார். இந்த மனுவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்தார்’’ என்றார்.