தமிழகம்

தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்க கூடாது: ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்று ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, உருமாறிய கரோனா வைரஸான ‘ஒமைக்ரான்’ அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடாதவர்கள் வணிக வளாகம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு சென்றுவர அனுமதிக்கக் கூடாதுஎன்று சுகாதாரத் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. மேலும், டாஸ்மாக்கில் மதுபானங்களை வாங்க கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று அண்மையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனைசெய்யக் கூடாது என்று மாவட்ட மேலாளர்கள் மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர், ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள குறுந்தகவலில் கூறியிருப்பதாவது:

அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். எனவே,மதுபான கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சரிபார்த்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வாடிக்கையாளருக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மேலும், மதுபான கடையின் முகப்பில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவாடிக்கையாளருக்கு மட்டுமே இங்கு மதுபானம் விற்பனை செய்யப்படும் என்ற வாசகம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT