கருத்து சுதந்திரம், எழுத்துரிமையை மறுப்பதாக காவல் துறை மீது புகார் தெரிவித்து, சென்னை தி.நகர் கமலாலயத்தில் நேற்று வாயில் கருப்புத் துணி கட்டியபடி போராட்டம் நடத்திய பாஜகவினர்.படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

கருத்து சுதந்திரத்துக்கு எதிராக வழக்கு: வாயில் கருப்பு துணி கட்டி பாஜகவினர் போராட்டம்

செய்திப்பிரிவு

கருத்து சுதந்திரத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து வாயில் கருப்புக் துணி கட்டி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூகவலைதளங்களில் கருத்துதெரிவித்து பதிவிடும் தேசியவாதிகளின் மீது, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, கைது செய்வதாக புகார் தெரிவித்து, சென்னையில் உள்ள பாஜகதலைமை அலுவலகத்தில் நேற்று வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

பின்னர், பாஜக சமூக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசியவாதிகள் மீது குண்டாஸ் போன்ற சட்டங்களை போட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பாஜக, அதன் ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குகள் போடப்படுகின்றன. வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். சந்தேகம் எழுப்புவர்கள் மீது காவல்துறையை ஏவி விடுவது ஏற்க முடியாது. திமுகவினர் பலர் முப்படை தளபதி மரணத்தில் தவறான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவரையும் கைதுசெய்யவில்லை. இது தொடருமானால் அரசைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், இராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

SCROLL FOR NEXT