மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மனித உடலில் நாள்பட்ட வளர்சிதை மாற்றங்களால் ஏற்படும் சர்க்கரை நோய் பாதிப்பானது, தனி நபருக்கு மட்டுமின்றி, அரசுக்கும் பொருளாதார ரீதியான சுமைகளை அதிகரிக்கிறது.
உலகிலேயே சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் சர்க்கரை நோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. அதாவது, நம் நாட்டில் 7.7 கோடி பேர் சர்க்கரை நோயாளியளாக உள்ளனர். அவர்களைத் தவிர 7.5 கோடி பேர் சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் இருக்கின்றனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை 10.4 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றா நோய்களைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை கடந்தசில ஆண்டுகளாக மத்திய, மாநிலஅரசுகள் அதிக அளவில் செயல்படுத்தி வருகின்றன.
தொற்றா நோய்களில் பிரதானமாக உள்ள சர்க்கரை பாதிப்பைக் கட்டுப்படுத்த, அதற்கான மருத்துவசேவைகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். அதன்படி, முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பானஎம்.டி. படிப்பில் சர்க்கரை நோய்க்கான பிரிவை பிரத்யேகமாக தொடங்க வேண்டும்.
நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் சர்க்கரை நோய்க்கான முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரியில் 1986-லேயே சர்க்கரை நோய்க்கு தனித் துறை உருவாக்கப்பட்டது.
பட்டயப் படிப்பாக உள்ள அதை முதுநிலை பட்டப் படிப்பாக மாற்ற வேண்டும். அதற்கு சர்க்கரை நோய் மருத்துவத்துக்கென பிரத்யேக எம்.டி. படிப்பை தேசிய மருத்துவ ஆணையம் தொடங்க வேண்டும். இதன் மூலம், இந்தியா முழுவதும் சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்களை அதிக அளவில் உருவாக்க முடியும்.
தமிழகத்தைப் பொருத்தவரை அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் சர்க்கரை நோய்க்கென சிறப்பு சிகிச்சை பிரிவுகளைத் தொடங்க அது வழிவகுக்கும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.