தமிழகத்தில் இளநிலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ்.கலந்தாய்வு வழக்கமாக ஜூலை மாதம் தொடங்கிவிடும்.
கரோனா வைரஸ் தொற்றுபரவலால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதமாகியும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இதுவரைதொடங்கவில்லை. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
வழக்கு விசாரணை வரும் ஆண்டு ஜனவரி மாதம்தான் நடைபெற உள்ளது. இதுவே, கலந்தாய்வு தாமதத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், 2021-ல்மருத்துவப் படிப்புகளில் சேரவேண்டிய மாணவர்கள் 2022-ல்சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்.டி., எம்.எஸ். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கிவிடும். இந்தஆண்டு கரோனா தொற்று பரவல்காரணத்தால் செப்டம்பர் தொடக்கத்தில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள், அம்மாத இறுதியில் வெளியாகின. அக்டோபர் மாதத்தில் தொடங்க வேண்டிய கலந்தாய்வு, உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாக தொடங்கவில்லை.
முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகளை வழங்குகின்றனர். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை முதலாமாண்டு மாணவர்கள் வராததால், ஏற்கெனவே 2, 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு பணிச் சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியுள்ளது. தேவையான சிகிச்சைகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் நோயாளிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.