சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், அறிவியல் பூர்வமான தொலை நோக்குத் திட்டங்களைக் கொண்டு வரவும், போக்குவரத்து காவல் அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நடப்பு ஆண்டு ஜன.1-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 3.05 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 14.37 லட்சம் வாகனங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 53 பெரிய நகரங்களில் மொத்தம் 47,829 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில், சென்னையில்தான் அதிகபட்சமாக 4,389 (9.2 சதவீதம்) சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். அதேநேரம் அண்மைக் காலமாக சென்னையில் போக்குவரத்து காவல் அதிகாரிகளை தொடர்ந்து இடமாறுதல் செய்வதால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதிலும், நவீன போக்குவரத்து திட்டங்களைக் கொண்டு வருவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையராக ஆர்.சுதாகருக்கு (தெற்கு) பின்னர் எழில் அரசன், லட்சுமி, செந்தில் குமாரி என அடுத்தடுத்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மாற்றப்பட்டனர். தற்போது புதிதாக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். வட சென்னையில் இருந்த போக்குவரத்து இணை ஆணையர்களும் இதேபோல் அடுத்தடுத்து வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணணும் சிறிது காலத்தில் மாற்றப்பட்டார். அதன் பின்னர், பிரதீப் குமார் நியமிக்கப்பட்டார். அவரும் சில நாட்களிலேயே பயிற்சிக்காக வெளிமாநிலம் சென்றார். பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பிய அவரும் தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார். இப்போதுவரை அந்த இடத்துக்கு அதிகாரி நியமிக்கப்படவில்லை. கூடுதல் பொறுப்பாக சென்னை தலைமையிட காவல் கூடுதல் ஆணையர் லோகநாதன் கவனிக்கிறார்.
போக்குவரத்து காவலைப் பொறுத்தவரை அதுகுறித்த தெளிவு பெற, பணியேற்ற நாளில் இருந்து குறைந்தது 3 முதல் 6 மாதமாவது பிடிக்கும். அதன் பின்னரே அத்துறை தொடர்பான புதுமை மற்றும் திட்டங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் யோசனை செய்து கொண்டு வர முடியும். முன்பு வாரம்தோறும் போக்குவரத்து போலீஸாரின் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அப்போது, எந்தப் பகுதிகளில் வாகன நெரிசல் மற்றும் விபத்து அதிகமாக உள்ளது. விதிமீறல்கள் அதிக அளவில் நடைபெறும் இடங்கள் எது, இவற்றை குறைக்க போக்குவரத்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கை என்ன, செயல்பாடுகள் என்ன என்று விரிவாக இதில் ஆலோசிக்கப்படும்.
ஆனால், தற்போது அதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுவது குறைந்துள்ளது. இதனால், வாகன நெரிசல் படிப்படியாக அதிகரித்து வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அண்மையில் பெய்த கனமழையால் சென்னையில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளை உடனுக்குடன் மாற்றாமல், அறிவியல் பூர்வமான புதுத் திட்டங்களை கொண்டு வர அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், காவல் ஆணையர் பிற துறைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்போல் போக்குவரத்துப் பிரிவு போலீஸாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.