திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணையும் என்ற நம்பிக்கை இருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் இன்று கூறுகையில், ''திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும் என திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேமுதிக கண்டிப்பாக எங்களுடன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு. திமுக - காங்கிரஸில் கூட்டணியில் இணைய வேண்டும் என விஜயகாந்துக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளேன். இப்போதும் அழைக்கிறேன்.
இப்போது விஜயகாந்தை பற்றிதான் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, ரஜினிகாந்தை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. கடந்த தேர்தல்களிலும் அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.