கரோனா பாதிப்பு தொடரும் நிலையில், ஒமைக்ரான் தடுப்பு மற்றும்ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டுமார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் தொடர்ந்துநீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த நவ.30-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ஊரடங்கு டிச.15 வரை நீட்டிக்கப்பட்டது.
அப்போது, டிச.1 முதல் கேரளாவுக்கு பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால், ஒமைக்ரான் பாதிப்பு அண்டை மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பு இல்லை என்று கூறப்பட்டாலும், பாதிப்புகள் அதிகரிக்ககூடாது என்பதற்காக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, ஒமைக்ரான் பாதிப்பு தடுப்புஉள்ளிட்ட விஷயங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை (13-ம்தேதி) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
குறிப்பாக, மக்கள் அதிகம்கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கண்டிப்புடன் அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.