தமிழகம்

மாசு கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பில் கோழிப் பண்ணைகளை கொண்டுவர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

மத்திய அரசு அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவுறுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில், வாரிய பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு, மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எ.உதயன்,வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள், மாவட்டப் பொறியாளர்கள் பங்கேற்றனர்.

இதில் அமைச்சர் மெய்யநாதன்பேசியதாவது:

தொழில் வளர்ச்சியால் ஏற்படும்நன்மைகளுக்காக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்க இயலாது. அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளை கண்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னை நார் தொழிற்சாலைகளை முறைப்படுத்த வேண்டும்.தோல், சலவைத் தொழிற்சாலைகளுக்காக அமைக்கப்பட்ட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தேங்கியுள்ள உப்புக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்.

ராணிப்பேட்டையில் நீண்டகாலமாக தேக்கி வைக்கப்பட்டுள்ள குரோமியக் கழிவுகளை, பாதுகாப்பான முறையில் மூடிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் ரசாயனக் கழிவுகளை வெளியேற்றாமல் தடுக்க, தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நகரப் பகுதிகளில் காற்றுமாசைக் கட்டுப்படுத்தி, வாழ்வதற்கு உகந்த பகுதிகளாக நகரங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி, கோழிப் பண்ணைகளை வாரியத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசு தொடர்பாகமக்கள் அளிக்கும் புகார்கள் மீதுஉடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT