டிச.16-ம் தேதி தொடங்க உள்ள தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழக அணி சார்பில் கோவில்பட்டியை சேர்ந்த 9 பேர் விளையாட உள்ளனர்.
கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி டிச.16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட உள்ள தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு அக்.30-ம் தேதி ராமநாதபுரத்தில் நடந்தது.
இதில் 200 மேற்பட்ட ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டனர். இதிலிருந்து சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் சென்னையில் ஒரு மாதம் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
அதிலிருந்து இறுதியாக தமிழக அணிக்காக விளையாட உள்ள 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 9 பேர் கோவில்பட்டியை சேர்ந்தவர்களாகும். அணியின் கேப்டனாக கோவில்பட்டியை சேர்ந்த ஆர்.நிஷி தேவ அருள் செயல்படுகிறார்.
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் தற்போது கோவில்பட்டியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் விளையாட உள்ள வீரர்களை கனிமொழி எம்.பி. சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அவர்களுக்கு சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதில், அமைச்சர் கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சங்க தலைவர் சேகர் ஜெ.மனோகரன், ஒலிம்பியன் திருமாவளவன், தேசிய போட்டி துணை தலைவர் செந்தில்ராஜ்குமார், தேசிய போட்டியின் பொருளாளர் சங்கிலி காளை, தமிழக அணியின் பயிற்சியாளர் முத்துக்குமரன், துணை செயலாளர் குருசித்ர சண்முக பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.