தமிழகம்

பாஜகவின் பொறுமையை சோதிக்க வேண்டாம்: அண்ணாமலை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பாஜகவின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை சூர்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ் (43). இவர் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிடுவார். இவர் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாகிஸ்தானை ஆதரிக்கும் திமுகவைத் தடை செய்ய வேண்டும் எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும்தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்.

இந்நிலையில் குன்னூருக்குச் சென்ற இந்திய முப்படைத் தளபதி, ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர் இழந்தனர். இச்சம்பவத்தில் தீவிரவாத சதி இருக்கலாம் என சர்ச்சைக்குரிய கருத்துகளை இவர் வெளியிட்டுள்ளார். இதனால் மதுரை காவல் ஆணையர் பிரேமானந்த்சின்கா உத்தரவின் பேரில், அண்ணா நகர் காவல் உதவி ஆணையர் சூரக்குமார், புதுார் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டி உள்ளிட்ட போலீஸார் நேற்று முன்தினம் காலை மாரிதாஸின் வீட்டுக்குச் சென்று, அவரை வெளியே வருமாறு அழைத்தனர். அவர் வர மறுத்து, பாஜகவினருக்குத் தகவல் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன், நிர்வாகி ஹரி உள்ளிட்டோர் மாரிதாஸ் வீட்டு முன் திரண்டனர். அவர்கள் மாரிதாஸைக் கைது செய்யக் கூடாது என போலீஸாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இருப்பினும் போலீஸார் மாரிதாஸை புதூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் மீதுபொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள மாரிதாஸ் மீது இபிகோ 153ஏ (கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுவது, கருத்து தெரிவிப்பது), இபிகோ 505 (2) (பொதுமக்கள் மத்தியில் பதற்றம், குழப்பத்தை விளைவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் மாரிதாஸ் கைது குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு அண்ணாமலை பதிலளிக்கும்போது, “17 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜகவின் பொறுமையை சோதிக்க வேண்டாம். தமிழக அரசுக்கு நான் கொடுக்கும் எச்சரிக்கை இதுதான். ட்விட்டர் பதிவுக்காக குண்டாஸ் சட்டம் பாயுமா? சைபர் குண்டாஸ் சட்டம் எங்காவது உள்ளதா? டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை. டிஜிபியின் கட்டுப்பாட்டிலிருந்து காவல்துறை நழுவிவிட்டது” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT