குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை விமானப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸார் தீவிர ஆய்வு மேற்கொண்டு தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில், முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் வந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த பகுதி, விமானப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தீவிர ஆய்வு நடத்தி விசாரணை நடந்து வருகிறது.
விமானப்படை ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான விமானப்படைக் குழுவினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கருப்புப் பெட்டி எடுத்துச் செல்லப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்த இடங்களில் உள்ள பொருட்களைச் சேகரித்து, பதிவு செய்யும் பணி நடந்தது. விபத்து ஏற்பட்ட பகுதியில் தனியார் எஸ்டேட், ஹெலிகாப்டர் விழுந்த இடம், சாலைப் பகுதி, தாழ்வாக உள்ள இடம், வனப்பகுதி குறித்த வரைபடம் கொண்டுவரப்பட்டு, ஆய்வுகள் மேற்கொண்ட வருவாய்த் துறையினர் விமானப்படை விசாரணைக் குழுவினருக்கு விளக்கம் அளித்தனர்.
மேலும் 'ட்ரோன்' இயக்கப்பட்டு வேறு இடங்களில் ஹெலிகாப்டர் பாகங்கள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து அந்தப் பகுதியில் 2-வது நாளாக ஆய்வு நடந்தது. விமானப்படைக் குழுவினர், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் ராஜேஸ்வர் சிங், நீலகிரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் ஆகியோர் அந்தப் பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தீவிரமாக ஆய்வு செய்தனர். ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததில் ஹெலிகாப்டர் பாகங்கள் சிதறிக் கிடப்பது தெரியவந்தது. அதனைச் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வரைபடம் மூலம் நடந்த ஆய்வின் அடிப்படையிலும், ஹெலிகாப்டர் பயணித்த வழித்தடம், அந்தப் பகுதியில் உள்ள பாகங்கள், தடயங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்துகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் வீடுகளில் உள்ள மக்களின் கணக்கெடுப்பு நடத்தினர். பனிமூட்டம் காரணமாக முறையாக வீடியோ பதிவு மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
விபத்து நிகழ்ந்த பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹெலிகாப்டர் வந்த திசை, எதிர்திசை என நான்கு புறங்களிலும் இரண்டு ட்ரோன்களைக் கொண்டு வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இந்த வீடியோ பதிவை முப்பரிமாணம் ஆக மாற்றி ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளவும் விமானப் படையினர் திட்டமிட்டுள்ளனர்.