தமிழகம்

அதிமுக ஆட்சியை அகற்ற திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்: திமுக மகளிரணியினருக்கு ஸ்டாலின் அறிவுரை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அகற்ற திமுக மகளிரணியினர் வீடு, வீடாகச் சென்று, திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுகவின் மாநில மகளிரணி, மகளிர் தொண்டரணி பிரச்சாரக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கே.என்.நேரு (தெற்கு), தியாகராஜன் (வடக்கு), மாநகரச் செயலாளர் அன்பழகன், மகளிரணிப் புரவலர் நூர்ஜகான் பேகம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாநில மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கனிமொழி தலைமை வகித்து பேசும்போது, “தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில், பெண்களுக்கு எதிராக ஆசிட்வீச்சு உள்ளிட்ட 21,427 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

பெண்களுக்கு எதிரான இந்த ஆட்சி வேண்டுமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மதுவால் தமிழகம் சீரழிந்துக் கொண்டிருக்கிறது. எனினும், ஆளும் அரசுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. இந்த ஆட்சியை மக்கள் தூக்கியெறிய இன்னும் 70 நாட்கள் மட்டும் உள்ளன” என்றார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியது: தமிழகத்தில் மீண்டும் வசந்தகாலம் உருவாகப் போகிறது. அதிமுகவின் மோசமான ஆட்சியால் சீரழிந்த தமிழகத்தை மீட்டெடுக்கும் நாள் நெருங்கி விட்டது.

திமுக மகளிரணியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் வீடு, வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். தினமும் 10 பேரையாவது சந்தித்து, கடந்த திமுக ஆட்சியின்போது பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த சலுகைகள், திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும். மேலும், தமிழகத்தில் நிலவும் மோசமான அதிமுக ஆட்சியின் அவலங்களையும் விளக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். தமிழகத்தில் தற்போது 84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் 43 லட்சம் பேர் பெண்கள். அதிமுக ஆட்சியில் எந்த திட்டமாவது ஒழுங்காக நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? இதுகுறித்து என்னுடன் பொதுமேடையில் விவாதிக்க அமைச்சர்கள் தயாரா?

1990-ல் திமுக ஆட்சியில் தருமபுரி மாவட்டத்தில்தான் முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழு தொடங்கப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. பெண்களுக்கு சுய உரிமை, சொத்துரிமை, நிர்வாக உரிமை வழங்கிய திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், திமுக மகளிரணி நிர்வாகிகள் கவிஞர் சல்மா, விஜயா தாயன்பன், வசந்தி ஸ்டான்லி, ஹெலன் டேவிட்சன், காஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT