உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ இல்லத்தின் சாவி, தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிச.5-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவர் வாழ்ந்தபோயஸ் தோட்டத்தில் உள்ள வேதாநிலையம் இல்லம் நினைவு இல்லம்ஆக்கப்படும் என்று 2017-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, வேதா நிலையம் மற்றும் அசையும் சொத்துகளை கையகப்படுத்துவதற்கான அவசர சட்டம் கடந்த ஆண்டு மே 22-ம் தேதிபிறப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டுஜூலை 24-ம் தேதி வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசின் அறிவிப்பை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தீர்ப்பில், வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்குவதற்கான சட்டத்தைரத்து செய்தும், வீட்டை தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தீபா, தீபக்கிடம்வீட்டின் சாவியை சென்னை ஆட்சியர் ஜெ.விஜயாராணி நேற்று காலை ஒப்படைத்தார். பின்னர், கணவர் மாதவனுடன் சென்ற தீபா, வேதா நிலையம் இல்லத்தை திறந்து பார்வையிட்டார். தீபக்கும் உடன் சென்றார். வழக்கமாக ஜெயலலிதா தொண்டர்களை பார்த்து கையசைக்கும் பால்கனிக்கு சென்று, கீழே நின்றிருந்த ஆதரவாளர்களை பார்த்து தீபா கையசைத்தார்.
‘‘முதலில் இந்த வீட்டில் பராமரிப்பு பணிகளை செய்வோம். சட்டரீதியான பணியும் மேற்கொள்ளப்படும். பிறகு இங்கு குடியேறுவேன். இதை எதிர்த்துஅதிமுக மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம்’’ என்றார்.