தமிழக தொழில்நுட்பவியல் துறை சார்பில், ஐடி நிறுவனங்கள், வல்லுநர்கள், அரசு அலுவலர்களை இணைக்கும் வகையில் ‘நுண்ணரங்கு-21 தமிழ்நாட்டின் வருங்கால வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வின் பங்கு’ என்ற தலைப்பிலான மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், இ-சேவை மூலம் ஆதார் சேவைக் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துவைத்து, தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க முடியும் என்பதில் அரசு தெளிவாக உள்ளது. தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இணையவழி சேவைகளை விரைவாகவும் தரமாகவும் மக்களுக்கு அரசு வழங்கி வருகிறது.
தமிழக பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் ஐடி துறையை விரிவுபடுத்தும் வகையில், எல்லா உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது.
அரசு அலுவலர்கள், வல்லுநர்கள், ஐடி மற்றும் அதைச் சார்ந்த சேவை நிறுவனங்களை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளை தமிழகத்தில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அனைத்து துறைகளும் தரவுகள் அடிப்படையில் நிர்வாகம் செய்வதற்காக ‘தரவுகள் கொள்கை’ உருவாக்கப்பட உள்ளது.
இதன்மூலம் அரசு தரவுகளை மக்களும் எளிமையாக கையாள முடியும். தனியார் நிறுவனங்களிடம் இருந்து கணினி சார்ந்த பொருட்களை அரசு வாங்குவதாக, தவறான தகவலை பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறார்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் நீரஜ் மித்தல், மின் ஆளுமை முகமை தலைமை செயல் அதிகாரி கே.விஜயேந்திர பாண்டியன், வேளாண் துறைச் செயலர் சி.சயமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.