தமிழகம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார்: சட்ட அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

செய்திப்பிரிவு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என்று சட்ட அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மற்றும் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் ஜெயசந்திரன், சித்தரஞ்சன் மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளில் நடந்த ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்தரங்கில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் சமத்துவம் குறித்து போதித்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என சகோதரத்துவம் குறித்து எழுதியுள்ளார். மனித உரிமைகளை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மண் போதித்துள்ளது.

சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக கல்லூரிகள் கொண்டுவரப்படும். மனிதஉரிமைகள் பாடத்தை சட்டப்படிப்பில் ஒரு பாடமாக சேர்ப்பதற்கு முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். வட்டாரங்களில் நீதிமன்றம் தேவைப்படும் இடங்களில் உயர் நீதிமன்ற அறிவுத்தல்படி நிறுவப்படும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். 7 பேர் விடுதலையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். உடல்நலம் காராணமாகவும் விடுதலை செய்ய வேண்டும்என்ற அரசின் தீர்மானத்தின் அடிப்படையில்தான் பேரறிவாளனுக்கு தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு வருகிறது. கருத்து சுதந்திரம் என்பது தனி நபர் உரிமை. கருத்து சுதந்திரம் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT