தமிழகம்

ஹெலிகாப்டர் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட நஞ்சப்பசத்திரம் மக்களுக்கு விமானப்படை நன்றி

ஆர்.டி.சிவசங்கர்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட குன்னூர் நஞ்சப்ப சத்திரம் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி, விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதிகளில் கடந்த 8-ம் தேதி முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதும் தீயை அணைக்க தங்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள குழாய்களிலிருந்து குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ராணுவம், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் வந்த பின்னர் அவர்களுக்கு ஒத்துழைத்தனர். மீட்புப் பணிக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளிலிருந்து போர்வை உட்பட பொருட்களைக் கொடுத்து உதவினர்.

இதனால், இரு நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்துவிட தற்போது ஒருவர் மட்டுமே உயிருடன் உள்ளார். இந்த மக்களின் தன்னலமற்ற செயலைக் காவல்துறையினரும், விமானப் படையினரும் பாராட்டியுள்ளனர்.

விமானப் படை சார்பில் நஞ்சப்ப சத்திரம் மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, உப்பு என நான்கு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், அவர்களது சேவைக்கு விமானப் படை நன்றி தெரிவித்துள்ளது.

விமானப் படை துணை மார்ஷல் சஞ்சீவ் ராஜ், நஞ்சப்ப சத்திரம் மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றிக் கடிதம் வழங்கியுள்ளார். அந்தக் கடிதத்தில், ''தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த அனைத்து உதவிகளுக்கும் முப்படை சார்பில் நன்றி கூறுகிறோம். தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT