மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (டிச.10) 200 இடங்களில் தொழிற்சங்கத்தினர் வாகன நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், காஸ் விலையை மத்திய அரசு உயர்த்தி வருவதைக் கண்டித்து நாடு முழுவதும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இன்று பகல் 12 மணியில் இருந்து 12.10 வரை ஆங்காங்கே செல்லும் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்,
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏவுமான எம்.சின்னதுரை, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர், கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் அன்புமணவாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று, புதுக்கோட்டையில் 32 இடங்களில் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்பட்டதால் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கட்டியவயலில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் எம்எல்ஏவின் காரும் சிக்கியது.
இதேபோன்று,மாவட்டத்தில் அறந்தாங்கி, பொன்னமராவதி, ஆலங்குடி, கீரனூர், கறம்பக்குடி, மீமிசல் உட்பட மாவட்டத்தில் 200 இடங்களில் வாகன நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால், மாவட்டம் முழுவதும் 10 நிமிடம் போக்குவரத்து முடங்கியது.