தமிழகம்

தமிழர்களின் ஆழ்மனதைத் தொடுவது நாட்டுப்புறக்கலைதான்: புதுக்கோட்டை ஆட்சியர் பேச்சு

கே.சுரேஷ்

தமிழர்களின் ஆழ்மனதைத் தொடுவது நாட்டுப்புறக்கலைதான் எனப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' குறித்து 2-ம் கட்டமாக நேற்று நடைபெற்ற மாநில அளவிலான 3 நாட்கள் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்.

தனியார் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' குறித்து ஆவுடையார்கோவில் அரசுப் பள்ளி மாணவர் காளிதாஸ், மாணவி ஆனந்தி ஆகியோர் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, "உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஆழ்மனதை எளிதில் தொடுவது நாட்டுப்புறக் கலைதான். அதனால்தான் அது இன்றுவரை உயிர்ப்போடு இருக்கிறது. அந்த அளவுக்கு நாட்டுப்புறப் பாடல்களில் உள்ள ஒவ்வொரு வரியும் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழப் பதியக்கூடும்.

அந்த வகையில்தான் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்களையும் தமிழக அரசு பயன்படுத்தி வருகிறது. குக்கிராமங்களுக்குச் செல்வதற்கு முன்னதாகவே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' குறித்துப் பாடிய ஆவுடையார்கோவில் அரசுப் பள்ளி மாணவர் காளிதாஸ், மாணவி ஆனந்தி போன்ற இளம் கலைஞர்களை அங்கீகரிக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1,200 இடைநிற்றல் மாணவர்கள் இருக்கின்றனர். மேலும், கற்றல் இடைவெளியில் உள்ள மாணவர்கள் போன்றோருக்கெல்லாம் மிக முக்கியத் திட்டமாக இல்லம் தேடி கல்வித் திட்டம் இருக்கிறது.

அச்சமின்றி, தயக்கமின்றிக் கல்வி பயில்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது நாட்டுப்புறக் கலைஞர்களின் கடமையாகும். கலை ஆர்வம் மிகுந்த நான் ஒரே இடத்தில் கலைஞர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி'' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம், மாநில கிராமியக் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சோமசுந்தரம், அனைத்து ஒருங்கிணைந்த நாட்டுப்புற சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னப்பொண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT