தமிழகம்

நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைகிறேன்: வெலிங்டன் ராணுவ மைய பதிவேட்டில் முதல்வர் உருக்கம்

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து நேரில் கேட்டறிய சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7 மணியளவில் கோவை விமானநிலையம் வந்தார். அங்கிருந்து, சாலை மார்க்கமாக வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்துக்கு 9 மணியளவில் முதல்வர் சென்றடைந்தார். அங்கு ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதற்கு முன்பு அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில், “தாய்த் திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிர் இழந்ததற்கு நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை அருகே உள்ள மைதானத்தில் அவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை ராணுவ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், டிஜிபி, ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி, கப்பல்படை அட்மிரல் ஹரிகுமார் உள்ளிட்டோர் இன்று காலை அஞ்சலி செலுத்த உள்ளனர். அதைத்தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட உள்ளன.

SCROLL FOR NEXT