குற்றச் செயல்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னையில் மீண்டும் போலீஸார் சைக்கிள் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுத்து நிறுத்த போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். நான்கு சக்கர வாகனம் மற்றும் பைக்குகளிலும் போலீஸார் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். குறுகலான பகுதிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னை பெருநகரில் சைக்கிள் ரோந்து பணியை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். காவலர்களின் உடல் அரோக்கியத்தைப் பேணுவதிலும், குறுகலான வழிகளில் சென்று கண்காணிப்புப் பணிகள், குற்றத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வதிலும் சைக்கிள் ரோந்துப் பணி முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு காவல் நிலையத்தில் 4 காவலர்கள் தினமும் இரவு நேரத்தில் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்.
குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் போலீஸார் சைக்கிள் ரோந்து பணியை முடுக்கி விட வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பெரும்பாலான காவல் நிலைய போலீஸார் சைக்கிள் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.