சிவசங்கர் பாபாவின் முதல் போக்சோ வழக்கில் 22-ம் தேதி வரை காவலை நீட்டித்த நீதிமன்றம் அன்று பாபாவுக்கு உடந்தையாக இருந்த பள்ளியின் ஆசிரியர்கள் 3 பேர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சுஷில் ஹரி தனியார் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். அவர் மீது 4 போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் மீதான விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் மற்றும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதல் போக்சோ வழக்கில் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய நீதிமன்றம் வரும் 22-ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. மேலும் 22-ம் தேதி விசாரணையின்போது சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த பள்ளியின் ஆசிரியர்கள் பாரதி, சுஷ்மிதா, தீபிகா ஆகியோரையும் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.