திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் மேம்படுத்தப்பட்ட சமய நூலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் உள்ள சமய நூலகங்கள் மேம்படுத்தப்படும் என்று அரசு அண்மையில் அறிவித்தது. இதன்படி, திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் உள் மணல் வெளிப் பகுதியில் உள்ள சமய நூலகம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் இன்று சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட சமய நூலகம் பக்தர்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் பி.ஆர்.கிருஷ்ணா, க.மோகன், மேலாளர் கி.உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து கூறுகையில், ”இந்த நூலகத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தம், வைணவ ஆகமங்கள், திவ்யதேச வரலாறு, திவ்யதேச சிறப்புகள், வைணவத் தத்துவங்கள் என 3,000-க்கும் அதிகமான இந்து சமய நூல்கள் உள்ளன. இந்த நூலகம் நன்கொடையாளர்கள் உதவியுடன் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை இடைவேளை நேரம். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நூலகத்துக்கு விடுமுறை. இந்த நூலகத்துக்கு இந்து சமய நூல்களை நன்கொடையாக அளிக்க விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.