தமிழகம்

உட்கட்சி பிரச்சினையை திசை திருப்பவே அதிமுக போராட்டம்: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

ஜெ.ஞானசேகர்

உட்கட்சி பிரச்சினையை மக்கள் கவனத்தில் இருந்து திசை திருப்பவே அதிமுக போராட்டங்களை அறிவித்துள்ளது என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்குற்றம் சாட்டினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் இன்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனைவி அனுராதாவுடன் வழிபாடு செய்தார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறியது:

"அதிமுக-வில் நடைபெறும் நிகழ்வுகள் கேலிக் கூத்தாக உள்ளன. அந்தக் கட்சியின் உட்கட்சி பிரச்சினைகளை மக்கள் அறிந்துள்ள நிலையில், அதை திசை திருப்பும் நோக்கில் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

எனக்கும் வி.கே.சசிகலாவுக்கும் கருத்து வேறுபாடு, மன வருத்தம் உள்ளதாக வரும் கருத்துகளுக்கு பதில் கூற விரும்பவில்லை. வி.கே.சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று உரிமை கோருவது தொடர்பாக நாங்கள் கருத்து கூற முடியாது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக நிச்சயம் போட்டியிடும். மக்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

நீட் தேர்வு விவகாரம், ஏழு தமிழர் விடுதலை போன்றவற்றில் தேர்தலுக்கு முன் திமுக பேசியதும், ஆட்சியில் அமர்ந்த பிறகு நடந்திருப்பது என்ன என்றும் அனைவருக்கும் தெரியும். திமுகவின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை இயக்குவது யார் என்பதை காலம் உணர்த்தும்.

அதிமுகவை மீட்டு நல்லாட்சி தருவதே எங்கள் இலக்கு. அதை நோக்கி நாங்கள் சென்று கொண்டுள்ளோம். வெற்றி- தோல்வியைக் கண்டு அஞ்சும் தொண்டர்கள் அமமுகவில் இல்லை. தொடர்ந்து போராடி எங்கள் இலக்கை நிச்சயம் பெறுவோம். அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள்" என்றார்.

செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மாநிலப் பொருளாளர் ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT