பிரபல ஜவுளிக்கடை நிறுவனங்கள் ரூ.1,000 கோடிக்கு விற்பனையை குறைத்து காட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து ரூ.10 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கிளைகளைக் கொண்ட 2 பிரபல ஜவுளிக்கடை நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்எழுந்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த 1-ம் தேதி முதல் 5 நாட்கள் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான நகைக்கடை, ஜவுளிக்கடை மற்றும்வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதுகுறித்து வருமானவரித் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நகைகள், ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் 2 பிரபல குழுமங்களின் மீது சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை வருமானவரித் துறையினர் கடந்த 1-ம் தேதி மேற்கொண்டனர். 37 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
இதில் ஒரு குழுமத்தில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிறஆதாரங்களின் வாயிலாக, விற்பனையைக் குறைத்து காட்டியது தெரியவந்துள்ளது. பல ஆண்டுகளாக இவ்வாறு செய்துள்ளதன் மதிப்பு ரூ.1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கணக்கில் வராதபணத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் ரூ.150 கோடிக்கு ஜவுளி மற்றும் நகைகள் வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது.
மற்றொரு குழுமத்தில், ரூ.80 கோடிக்கு போலி ரசீதுகளைப் பெற்று வரிக்குரிய வருவாயை குறைத்து காட்டியிருந்தது தெரியவந்தது. கணக்கில் வராத தங்கம்வாங்கியது தொடர்பான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. நகைகளின் செய்கூலியை அதிகப்படுத்திகாட்டியிருந்ததும், ரூ.7 கோடி மதிப்பிலான கணக்கில் வராத வாடகைரசீதுகள் மற்றும் ஸ்கிராப் விற்பனையும் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு குழுமங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.10 கோடிரொக்கம் மற்றும் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.