நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. மக்கள் நீதிமய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு, துணைத்தலைவர் மவுரியா தலைமையில் துணைத் தலைவர் தங்கவேலு, நிர்வாகக் குழு உறுப்பினர் பிரியா, மாநிலச் செயலாளர்கள் சிவ.இளங்கோ, செந்தில்ஆறுமுகம், சரத்பாபு ஏழுமலை ஆகியோரை உள்ளடக்கிய மாநிலத் தேர்தல் தலைமைப் பணிக் குழு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யவிரும்புவோர் நேரிலும், http://www.maiam.com/application-form.php என்ற இணையத்தின் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு பொதுப் பிரிவினர் ரூ.2ஆயிரம், பெண்கள், எஸ்.சி., எஸ்.டி.பிரிவினர் ரூ.1,000, நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு பொதுப் பிரிவினர் ரூ.1,000, பெண்கள், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் ரூ.500, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்குபொதுப் பிரிவினர் ரூ.500, பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்ரூ.250 செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு கட்டணம் இல்லை. மண்டல, மாவட்ட செயலாளர்களின் பரிந்துரையை பெற்று, வேட்பாளர்களை தேர்வு செய்து, தேர்தல் தலைமைப் பணிக்குழு, நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கும்.