திருவேற்காட்டில் அம்மா உணவகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை மறைத்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டதால், அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் அம்மா உணவகங்களின் பெயர் மாற்றப்படாமல் அந்த பெயரிலேயே செயல்பட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பஸ் நிலையத்தில், நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை மறைத்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தையும், மற்றொரு புறத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் படத்தையும் திமுகவினர் ஒட்டினர்.
இதையறிந்த அதிமுகவினர், அங்கு சென்று, திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருவேற்காடு போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர், ஜெயலலிதா படத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த கருணாநிதியின் படத்தை திமுகவினர் அகற்றினர். பின்னர் அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.