தமிழகத்தில் குழந்தைகள் காணா மல் போவது அதிகரித்துள்ளது குறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. தினமும் இரண்டு குழந்தைகள் காணாமல் போகின்றன. 2014-ம் ஆண்டில் 441 குழந்தைகளும், 2015-ம் ஆண்டில் 656 குழந்தைளும், இந்த ஆண்டில் 3 மாதங்களில் மட்டும் 271 குழந்தைகளும் காணாமால் போகியுள்ளன. 2014-ம் ஆண்டில் சென்னையில் 114 குழந்தைகளும், 2015-ம் ஆண்டில் 71 பெண் குழந்தைகள் உட்பட 149 குழந்தைகளும் மற்றும் இந்த ஆண்டில் மட்டும் 58 குழந்தைகளும் காணாமல் போயுள்ளன. கடத்திச் செல்லப்படும் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்து கின்றனர். சிலர் பிச்சை எடுக்க வைக்கின்றனர். மேலும் குழந்தை களை விற்பனை செய்கின்றனர்.
குழந்தைகள் காணாமல் போவது தொடர்பாக வரும் புகார்கள் மீது போலீஸார் சரியாக கவனம் செலுத்துவதில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. குழந்தைகள் காணாமல் போவது பற்றி புகார்கள் வந்தால் போலீஸார் உடனடியாக விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தை தானாகவே முன்வந்து வழக்காக ஆணையம் எடுத்துள்ளது. குழந்தைகள் காணாமல் போவது பற்றி 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும்.
இவ்வாறு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.