தமிழகம்

தமிழகம் - கேரளா போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்க குழு; முல்லை பெரியாறு குறித்து முதல்வர்கள் பேசுவர்: சென்னையில் கேரள அமைச்சர் அந்தோணிராஜ் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகம் - கேரளா இடையே போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க குழு அமைக்கப்படும். முல்லை பெரியாறு விவகாரத்தில் இருமாநில முதல்வர்கள் பேசி, உரிய முடிவு எடுப்பார்கள் என்றுகேரள போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி ராஜ் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை நேற்றுசந்தித்த அந்தோணி ராஜ், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனாவால் கேரளா - தமிழகம் இடையே பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது சபரிமலை சீசன் என்பதால், அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் கேரளா வருவார்கள். இதை கருத்தில் கொண்டு, உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்ததற்குநன்றி.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்கேரளாவில் தென்னிந்திய போக்குவரத்து கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழக அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் வருவதாக கூறியுள்ளார்.

பாரத் சீரீஸ் (தேசிய அளவிலான வாகனப் பதிவு முறை) குறித்துதமிழக நிதி மற்றும் போக்குவரத்து அமைச்சருடன் விவாதித்தேன். தமிழகம், கேரளாவில் இதுவரைபாரத் சீரீஸ் முறை அமல்படுத்தப்படவில்லை. எனவே, இதுகுறித்துஇரு மாநிலமும் இணைந்து முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சோதனைச் சாவடிகளை நீக்குவது குறித்த மத்திய அரசின் அறிவுறுத்தல் குறித்தும் விவாதித்தோம். கரோனா காலத்தில் மத்திய அரசுபொதுப் போக்குவரத்து துறைக்குநிதியுதவி மற்றும் மறுகட்டமைப்புக்கான பரிந்துரைகளை வழங்கவில்லை. மக்களுக்கு சேவை செய்யும் இந்த துறைக்கு தேவையான நிதியுதவி வழங்க வேண்டும் என்று, இரு மாநிலமும் இணைந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க முடிவெடுத்துள்ளோம்.

சுங்கச்சாவடிகளைப் பொருத்தவரை, தமிழக அரசு மாதம் ரூ.14 கோடியும், கேரள அரசு ரூ.2 கோடிக்கு அதிகமாகவும் செலுத்த வேண்டி உள்ளது. எனவே தமிழகம், கேரளா இணைந்து, அரசுப்பேருந்துகளுக்கு மட்டும் சுங்கச்சாவடிகளில் விலக்கு அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க முடிவெடுத்துள்ளோம்.

இயற்கை எரிவாயு, திரவ எரிவாயு பேருந்துகள், மின்சாரப் பேருந்துகளை வாங்க மத்திய அரசு ஊக்குவிக்கிறது. ஆனால், இயற்கை எரிவாயுவின் விலை தினசரி வேறுபடுவதால், அதில் சிக்கல் உள்ளது. அதேபோல, டீசல் பேருந்துகளைவிட எரிவாயு, மின்சாரப் பேருந்துகளுக்கு அதிகம்செலவாகிறது. எனவே, மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெறவேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்தும் விவாதித்தோம்.

மாநிலங்களுக்கு இடையேஏற்படும் தினசரி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, மாநில போக்குவரத்து செயலர்கள், ஆணையர்கள் கொண்ட குழுவை அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு விவகாரம், எனது துறையின் கீழ் வருவதில்லை. இரண்டு மாநிலத்தின் விருப்பம் தொடர்பானது என்பதால், இரு முதல்வர்களும் இதுகுறித்து பேசி, உரிய முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT