தமிழகம்

இந்திய உணவு ஏற்றுமதிக்கு உலக அளவில் பெரிய வாய்ப்பு - ‘ஃபியோ’ துணை தலைமை இயக்குநர் கருத்து

செய்திப்பிரிவு

இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஃபியோ), மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்துடன் இணைந்து, வளைகுடா நாடுகளில் விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கை நடத்தியது.

இதில் பங்கேற்ற ஃபியோ துணைதலைமை இயக்குநர் கே.உன்னிகிருஷ்ணன் கூறியதாவது:

வளைகுடா நாடுகள் அதிகளவு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்றன. இந்தியா ஒரு பெரியவிவசாய மற்றும் உணவு உற்பத்தியாளராக உள்ளது. மேலும், மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரத்தை நம்பியிருப்பதால், உணவு விநியோகத்தை நிலைப்படுத்துவதன் மூலம்,வளைகுடா நாடுகளிடம் பலன்களை அடைய முடியும்.

தற்போது இந்தியாவின் விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களில் 22 சதவீதம் வளைகுடா நாடுகளின் சந்தைக்குச் செல்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் நமது ஏற்றுமதியை இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் அலுவலகத்தின் இணை இயக்குநர் விஷ்வாஸ், “மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதை எங்கள் அலுவலகம் ஊக்குவிக்கிறது. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு ஒவ்வொரு நாட்டுக்கும் விவசாய ஏற்றுமதி உத்தி வகுக்கப்படுகிறது” என்றார்.

அபெடா நிறுவனத்தின் பொதுமேலாளர் ஷோபனா குமார், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேக்கேஜிங் துணை இயக்குநர் பொன்குமார், எஃப்எஸ்எஸ்ஐ துணை இயக்குநர் எம்.கண்ணனா உள்ளிட்ட பலர் பேசினர். 150-க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் உணவுப் பொருள் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT