சு.வெங்கடேசன் 
தமிழகம்

10 ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்கப்படவில்லை; தேசிய மருந்துசார் கல்வி, ஆராய்ச்சி கழகத்தை மதுரையில் உடனடியாக அமைக்க வேண்டும்: மக்களவையில் சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மதுரையில் உடனடியாக தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் தொடங்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் நேற்று தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் தொடர்பான மசோதா மீது நடந்த விவாதத்தின்போது சு.வெங்கடேசன் எம்பி பேசியதாவது:

2011-ம் ஆண்டு 8-வது நிதிக் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் 8 தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்று தமிழகத்தின்மதுரையில் அமையும் என்றுஅன்றைய மத்திய அமைச்சரவையும் உறுதிப்படுத்தியது.

மற்ற மாநிலங்களில் உடனடியாக ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் 10 ஆண்டுகளாகியும் மதுரைக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

தமிழக அரசு, மதுரை திருமோகூரில் 116 ஏக்கர் நிலத்தைக் கொடுத்து 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தொடங்கப்படவில்லை.

ஏற்கெனவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன. அதேபோல் இதுவும் மாறிவிடக் கூடாது.

மதுரையில் ஒரு தேசிய கல்வி நிறுவனம் கூட இல்லை. எனவே, மதுரையில் உடனடியாக தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT