தமிழகம்

சென்னையில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.30 லட்சம் பறிமுதல்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் அலுவலகம் சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோடம்பாக்கம் மண்டல துப்புரவு பணியாளர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி விருகம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. அதில் மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களித்து, 100 சதவீத வாக்குபதிவு உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத் தில் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. சென்னையில் இதுவரை ரூ.30 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வண்ண அட்டை கட்டாயமில்லை

வண்ண வாக்களர் அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் மத்தியில் தெரி விக்கப்படுகிறது. தேர்தலில் வாக்களிக்க வண்ண வாக்காளர் அட்டை கட்டாயம் இல்லை. அவரவர் விருப்பத்தின் பேரில் வாக்காளர்கள், வண்ண அட்டை பெற விண்ணப்பித்து பெற்று வருகின்றனர்.

தேர்தல் முடிந்த பின்னும்..

தேர்தல் முடிந்த பிறகும் வண்ண வாக்காளர் அட்டை வழங்கும் முகாம்கள் தொடர்ந்து செயல்படும். அதை வாக்காளர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.ஆசியா மரியம், விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் அலுவலர் ஆர்.திவாகர், தியாகராய நகர் தொகுதி தேர்தல் அலுவலர் கவிதா ராமு ஆகியோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT